Site icon Chennai City News

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனத் தொடங்கி தன்னுடைய உறுதிமொழியை ஏற்றார். அவரை அடுத்து அமைச்சரவை சகாக்கள் ஒவ்வொவரும் ஒன்றன்பின் ஒன்றாக பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துக் கொண்டனர்.

முதல்-அமைச்சராக 2 உறுதிமொழி பிரமாணங்களையும் வாசித்து முடித்த பிறகு அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். பிறகு கவர்னர் பன்வாரிலாலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து நன்றி கூறினார்.

பதிலுக்கு கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பிறகு புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக பெயர் சொல்லி அழைத்து பதவி ஏற்க வைத்தார்.

அதன்படி துரைமுருகன், கே.என். நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில் பாலாஜி, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசர், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோ தங்கராஜ், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அமைச்சர்கள் பதவி ஏற்றதும் கோப்பில் கையெழுத்திட்டனர். பிறகு கவர்னருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வணக்கமும், நன்றியும் தெரிவித்தனர்.

இந்த பதவியேற்பு விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும், தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

Exit mobile version