‘நிலச்சரிவு பகுதிகளை ஆய்வு செய்ய 2 புவி தொழில்நுட்ப மையங்கள்’ : அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இயற்கை வளங்கள் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும்.
2. ரூ. 5 கோடியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புவிசார் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.
3. சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் தொடர்பான துறையின் அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் விதமாக ஒரு திட்ட மேலாண்மை அலகு நிறுவப்படும்.
4.ரூ.1 கோடியில் கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ஏற்படுத்தப்படும்.
5.நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் 2 புவி தொழில்நுட்ப மையங்கள் திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.
6.ரூ.19 லட்சத்தில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம் கொடக்கல் கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும்.
7. ரூ.14 லட்சத்தில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் தருமபுரி மாவட்டம் கடத்தூர் காப்புக் காட்டில் செயல்படுத்தப்படும்.
8. தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை மென்பொருள் தொகுப்பு ரூ.75 லட்சத்தில் உருவாக்கப்படும்.