சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட், ரோகித் இரு ஜாம்பவான்கள் ஓய்வு…! ஆக்ரோஷமாக கொண்டாடிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறும் ராகுல் டிராவிட்..!

0
243

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட், ரோகித் இரு ஜாம்பவான்கள் ஓய்வு…! ஆக்ரோஷமாக கொண்டாடிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறும் ராகுல் டிராவிட்..!

உலகக்கோப்பையை வென்ற கையோடு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து அறிவித்தனர். இது, அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. முக்கிய கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், விராட் கோலியின் நிதானமான ஆட்டம் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அவர் 59 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்ட நாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து பேசிய கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாகவும், இளம் வீரர்களின் வாய்ப்பை கருதி ஓய்வு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்கள் அடித்துள்ளார். இவற்றில் 1 சதம் மற்றும் 38 அரை சதங்களும் அடங்கும்.

விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்த சில மணி நேரத்தில், கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வு முடிவை பற்றி தெரிவித்தார். போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இதுவே தனது இறுதிப்போட்டி எனவும், ஓய்வு பெற இதனை விட சிறந்த தருணம் இல்லை எனவும் கூறினார். டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 159 போட்டிகளில் விளையாடி 4,321 ரன்கள் அடித்துள்ளார். இவற்றில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர்கள் இருவரும் ஓய்வுபெற்றிருந்தாலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்பதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இவர்களைபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது பதவியில் இருந்து விடைபெறுகிறார். டி20 உலகக்கோப்பையை பெற்ற பின்னர் ராகுல் டிராவிட்டிடம் கோப்பையை கொடுத்தபோது, அவரும் வீரர்களுடன் இணைந்து தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தார்.

இவர், 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதில், ஏற்பட்ட விரக்தி மற்றும் விமர்சனக் கனைகளால் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட். ஆனால், வீரராக விடைப்பெற்ற மண்ணிலேயே பயிற்சியாளராக இந்திய அணிக்கு கோப்பை வென்றுக் கொடுத்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார் ராகுல் டிராவிட்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ராகுல் டிராவிட், இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இதனை தொடர்ந்து, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட், பல்வேறு திறமையான வீரர்களை பட்டைத்தீட்டினார். பயிற்சியாளராக இந்திய அணிக்கு 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளார். 4 ஆண்டுகள் இளம் படையை வழிநடத்திய ராகுல் டிராவிட்டிற்கு, 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு, இந்திய அணியின் வெற்றிகள் ஏறுமுகமாகவே இருந்தன. உலகில் தலை சிறந்த அணியாக இந்தியா உருவெடுத்தது. அவரின் வழிகாட்டுதலில் 56 ஒருநாள் போட்டிகளை எதிர்கொண்ட இந்திய அணி 41-ல் வெற்றி பெற்றது. இதே போன்று, 20 ஓவர் போட்டிகளிலும், டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அனைத்திற்கும் மேலாக, அனைத்து வகையான போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்ததில் ராகுல் டிராவிட்டின் பங்கு முக்கியமானது.

ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி அடைந்த தோல்வி, ராகுல் டிராவிட் மீது மீண்டும் விமர்சனங்களை வீசத் தொடங்கின. ஆனால், விமர்சனங்களை கண்டு கலங்காமல் தொடர்ந்து அணியை திறம்பட வழிநடத்திய ராகுல் டிராவிட், 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார்.

தனது கிரிக்கெட் பயணத்தின் முதல் இன்னங்ஸில் வீரராக தோல்வியுடன் விடைப்பெற்ற ராகுல் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் பயிற்சியாளராக வெற்றி வாகை சூடியுள்ளார். எப்போதும் அமைதியான முகத்துடன் காணப்படும் டிராவிட், தான் தோற்ற பார்படாஸ் களத்திலேயே கோலி கைகளில் இருந்து உலகக்கோப்பையை வாங்கியதும் ஆராவாரத்துடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பயிற்சியாளராக இந்திய அணிக்கு 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்த நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பையும் பெற்று தந்துள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பையை ஏந்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.