Chennai City News

‘பாசிஸ்டுகளின் கனவுகள் பலிக்காது – இது குட்டி ஸ்டோரி அல்ல, வரலாறு’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

‘பாசிஸ்டுகளின் கனவுகள் பலிக்காது – இது குட்டி ஸ்டோரி அல்ல, வரலாறு’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்” என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்நூலினை திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்று கொள்கிறார்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அமெரிக்காவில் நிறவெறியை எதிர்த்து, கருப்பின இயக்கங்கள் போராடியது. அதேபோல் தமிழ்நாட்டில் சாதி வெறியை எதிர்த்து கருப்புச் சட்டை அணிந்து திராவிட இயக்கம் போராடியது. இன்றும் போராடிக்கொண்டிருக்கிறது. தோல் மூலம் கண்ணுக்கு தெரிகின்ற நிறவெறியை விட, கண்ணுக்கே தெரியாத சாதியின் வெறி மிகமிகக் கொடூரமானது.

உலகில் பல நாடுகளில் கருப்பை இழிவாக நினைத்தார்கள். ஆனால் அதே கருப்பு நிறத்தை புரட்சிக்கான அடையாளமாக மாற்றிக் காட்டினார் தந்தை பெரியார். திராவிட இயக்கத்தை பொறுத்தவரையில், மதத்தை விட மனிதர்களின் உரிமைதான் பெரியது என்று உறுதியாக நம்புகிறது.

அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு, வெள்ளையின மக்கள் பேருந்தில் நின்றால், கருப்பின மக்கள் உட்கார்ந்த இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கொடூரம் அரங்கேறியது. ரோசா பார்க்ஸ் என்ற கருப்பினத்தவர் தனது பேருந்து இருக்கையை ஒரு வெள்ளை மனிதருக்கு கொடுக்க மறுத்ததால் அவரை காவல்துறை கைது செய்தது, பின்னர் மிகப்பெரிய போராளியாக ரோசா பார்க்ஸ் மாறுகிறார். அவரின் கைதை எதிர்த்து கருப்பிண மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதன்பிறகு கருப்பின மக்கள் சமமாக நடத்தப்பட்டார்கள்.

அதற்கு இணையான ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்துள்ளது. 1930 காலக் கட்டத்தில் நீதி கட்சியின் முன்னணி தலைவர் WPA சௌந்தரபாண்டியனார், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தார். பட்டியலின ஒடுக்கப்பட்ட மக்களை பேருந்தில் ஏற்றாமல் இருந்த கொடுமைக்கு எதிராக, இனி அம்மக்களை பேருந்துகளில் ஏற்றவில்லை என்றால், அப்பேருந்தின் உரிமை ரத்து செய்யப்படும் என அறிவித்தார். அமெரிக்காவில் போராடி பெற்ற உரிமையை, தமிழ்நாட்டில் போராட்டம் இல்லாமல் பெற்றுக்கொடுத்தது நீதிக்கட்சி!’ எனத் தெரிவித்தார்.

Exit mobile version