Site icon Chennai City News

தவறு செய்தால் பணி நீக்கம்: அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தவறு செய்தால் பணி நீக்கம்: அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்த பிறகு, நேற்றைய தினம் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் நடந்துமுடிந்து அதிகாரிகள் வெளியேறிய பிறகு, முதல்வர் அமைச்சர்களுடன் தனியாக உரையாடி அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதில் அவரவர் துறையில் பணி நியமனங்கள் மற்றும் அமைச்சர்களின் பி.ஏக்கள் நியமனம்கூட வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் மக்களிடம் நல்ல நிர்வாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக தொகுதியில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து நேரடியாக காவல்துறையிடம் தொடர்புகொள்ள கூடாது எனவும், காவல்துறை தன்வசம் உள்ளதால் நேரடியாக புகார்களை தன்னிடமே தெரிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பலருக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது அமைச்சர்களாகியுள்ளவர்கள், வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், முறைகேடுகள் நடைபெறும் பட்சத்தில் அந்த அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அமைச்சர்களும் இந்த கருத்தை ஏற்று நடப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கின்றனர்.

Exit mobile version