Chennai City News

தமிழக சட்டசபை தேர்தல் 2021 : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி

சட்டசபை தேர்தல் 2021 : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது.

ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்து நடத்தினர்.

கடைசி நாளான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்திருந்ததால் அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அப்போது மு.க.ஸ்டாலினிடம் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேர்காணல் நடத்தினார். கொளத்தூர் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேறு யாரும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.

இதே போல் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு உதயநிதி ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகள் அனைத்துக்கும் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.

Exit mobile version