Site icon Chennai City News

‘சட்டமன்ற நாயகர்- கலைஞர்’ : நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘சட்டமன்ற நாயகர்- கலைஞர்’ : நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் இந்திய அரசியலின் திசையை தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22.05.2023 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமையில் 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இச்சிறப்பு குழுக்களில், சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களைத் தலைவராகக் கொண்ட “சட்டமன்ற நாயகர்-கலைஞர்” குழுவால், “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 120 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் துணைக் குழுக்கள் மூலம் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

இக்கருத்தரங்குகளில் சுமார் 600 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு சென்னை, மாநிலக் கல்லூரியில் 27.2.2024 அன்று நடைபெற்றது. அதில் 54 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மேலும், சென்னை, ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு 29.8.2024 அன்று நடைபெற்றது. அதில், 53 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவின் நிறைவாக, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட “சட்டமன்ற நாயகர்-கலைஞர்” நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் அவர்கள் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சரும், சட்டமன்றப் பேரவை முன்னவருமான துரைமுருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்த சிறப்பு மலரில் சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய முக்கிய உரைகள், சட்டமன்ற மேலவையில் ஆற்றிய முக்கிய உரைகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசினர் தனித் தீர்மானங்கள், சட்டப்பேரவையில் கலைஞர் பொன்விழா முக்கிய உரைகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பினை போற்றிடும் தலைவர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றவர்களின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அதனைத் தொடர்ந்து, “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கருத்தரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ். ரகுமாள் (முதலிடம்), திருப்பத்தூரைச் சேர்ந்த மா. மகேஷ் (இரண்டாமிடம்) மற்றும் சென்னைச் சேர்ந்த நா. அழகேசன் (மூன்றாமிடம்) ஆகிய மூன்று கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இ. முகம்மது ஹாரிஸ் (முதலிடம்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. கவிலன் (இரண்டாமிடம்) மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா. வர்ஷா (மூன்றாமிடம்) ஆகிய மூன்று பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கு முதல் பரிசாக 1 இலட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் ஆகிய பரிசுத் தொகைக்கான வங்கி வரைவோலைகளையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version