கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புகள்… தமிழ்நாடு அரசு அனுமதி!
சென்னையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையானது ரூ.230 கோடியில் தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், நுரையீல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சைகள், 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு (2023) ஜீன் 15-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெறும் சிறந்த மருத்துவமனியாக கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையாக இது செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், துணை மருத்துவ படிப்புகள் (பாரா மெடிக்கல்) தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
2024-25-ம் கல்வியாண்டில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புகள் தொடங்க மருத்துவ கல்வி இயக்குநர் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மருத்துவ கல்லூரிக்கல்வி இயக்குநரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அரசு, 8 சான்றிதழ் படிப்புகள், 2 டிப்ளமோ படிப்புகள், 1 பட்ட படிப்பு என 11 துணை மருத்துவ படிப்புகளை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனியில் தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, மயக்கவியல் நிபுணர், அறுவை கூடம் தொழில்நுட்ப உதவியாளர், டயாலிசிஸ் உதவியாளர், அவசர சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்கவியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்புகள், பி.எஸ்சி. நியூரோ எலக்ட்ரோபிசியாலஜி ஆகிய பட்ட படிப்பும் தொடங்கப்பட உள்ளது.
இதில் சான்றிதழ் படிப்புகளுக்கு ஒரு வருட படிப்புடன் 3 மாத பயிற்சியும், டிப்ளமோ படிப்புகளுக்கு 2 வருட படிப்புடன் 3 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியும், பட்ட படிப்புக்கு 3 ஆண்டுகள் ஆண்டுகளுடன் 1 வருட பயிற்சியுடன் இந்த படிப்புகள் வழங்கப்பட உள்ளது. சான்றிதழ் படிப்பு ஒன்றுக்கு 20 இடங்களும், டிப்ளமோ 20, பட்ட படிப்பு 5 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன. அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து மருத்துவ கல்லூரி கல்வி இயக்குநர் தேவையான நடவடிக்கைகளை தொடங்க அறிவுறுத்தப்படுகிறது.