Site icon Chennai City News

‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’: பாடகர் சுசீலா, கவிஞர் மேத்தாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்!

‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’: பாடகர் சுசீலா, கவிஞர் மேத்தாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அந்த வகையில் இந்தாண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ கவிஞர் திரு. மு. மேத்தா-வுக்கும், பின்னணி பாடகி பி.சுசிலா-வுக்கும் வழங்கப்பட்டது. இந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தனது திரைவசனங்கள் மூலமாகத் தமிழ்ச் சமூகத்துடன் உரையாடல் நிகழ்த்தி மாற்றங்களுக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்! அவரது பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ இவ்வாண்டு முதல் வழங்கப்படுகின்றன.

முதலாமாண்டு விருதுகளை, தன் மயக்கும் குரலால் பல லட்சம் இரசிகர்களின் மனங்களில் குடியேறிவிட்ட ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ பி.சுசீலா அவர்களுக்கும் – வளமான எழுத்துகளால் கோக்கப்பட்ட வைரமாலையெனக் கவிதைகள் படைத்திட்ட கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் வழங்கி நிரம்ப மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version