கிறிஸ்தவ மக்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வாழ்த்து!
சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சேலத்தில், கிறிஸ்தவ மக்களுக்கு இனிப்பு மற்றும் சிறப்பு தொகுப்பை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இல்லத்தில், கிறிஸ்தவ மக்களுக்கு இனிப்பு மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை வகித்து, கிறிஸ்தவ மக்கள் 500 பேருக்கு இனிப்பு மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு தொகுப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் துணைச்செயலாளர் சக்திவேல் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், அம்மாப்பேட்டை இம்மானுவேல் ஜெப ஐக்கிய சபை உறுப்பினர்கள் 500 பேருக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில், ஜெப ஐக்கிய சபைபோதகர் செந்தில்குமார், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், ரவிச்சந்திரன் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.