மாடன் கொடை விழா சினிமா விமர்சனம் : மாடன் கொடை விழா – மண்மணக்கும் ஆக்ரோஷ திருவிழா | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஸ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு :- கேப்டன் சிவபிரகாசம், உதயரியன்
தயாரிப்பு நிறுவனம் : தெய்வா புரொடக்ஷன்
கதை, திரைக்கதை இயக்கம்:- இரா. தங்கபாண்டி
ஒளிப்பதிவு :- சின்ராஜ் ராம்
இசை :-விபின். ஆர்.
வசனம் :- நெய்வேலி பாரதி குமார்
எடிட்டர் :- ரவிசந்திரன். ஆர்.
ஸ்டண்ட் :- மாஸ் மோகன்
டான்ஸ் :- ராக் சங்கர்
தயாரிப்பு நிர்வாகம் :- குட்டி கிருஷ்ணன்
தயாரிப்பு மேற்பார்வை :- சீனு
மக்கள் தொடர்பு :- விஜயமுரளி
தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுடலை மாடன் குலதெய்வ வழிபாடு, கொடை திருவிழாவில் கணியான் கூத்து என்ற நாட்டுப்புறக்கலையுடன் கோலாகலமாக நடைபெற்ற போது, தெருக்கூத்து கலைஞரான திருநங்கை ஒருவர் (ரஸ்மிதா) மர்மமான முறையில் மரணம் அடைகிறார். போலீஸ் அதை தற்கொலை என்று வழக்கை முடிக்கிறது. அதன்பிறகு ஊரில் சுடலை மாடன் சாமியின் கொடை விழா பல வருடங்களாக நடக்காமல் போகிறது. அதனால் ஊர் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில், சென்னையில் வேலை பார்க்கும் முருகன் (கோகுல் கவுதம்), பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டு ஊர் திரும்புகிறார். பாட்டி முருகனிடம் நம்ம குல தெய்வம் சுடலை மாடனுக்கு கொடை விழா நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஊர் மக்களும், சொந்த பந்தங்களும் நேர்த்திக்கடன் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் என கூறுகிறார். நீண்ட காலமாக மறக்கப்பட்ட இந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கத் தீர்மானித்த முருகன் (கோகுல் கவுதம்), பல ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கும் வருடாந்திர சுடலை மாடன் விழாவை ஏற்பாடு செய்யும் பணியை தொடங்குகிறார். ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அவரது தந்தை தனது மருத்துவ செலவுக்காக கோவில் இருக்கும் நிலத்தை சூரிய நாராயணன் என்பவரிடம் அடமானம் வைத்து விடுகிறார். முருகனிடம் கொடை விழா நடத்தும் எண்ணத்தை விட்டுவிட்டு, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்துகிறார். தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகன், சூரிய நாராயணனிடம் தன் தந்தை அடகு வைத்த நிலத்தை கேட்கிறார். ஆனால், சூரிய நாராயணன் 30 லட்சம் பணம் கேட்டு நிலத்தை தர மறுக்கிறார். இந்த பிரச்சனை பஞ்சாயத்து வரை செல்கிறது. அங்கு நடக்கும் பஞ்சாயத்தின் போது அது சண்டையாக மாறி ஒரு கொலையும் விழுகிறது. இந்த கொலை பழி முருகன் மீது விழுகிறது. வழக்கம் போல் எதிரி முருகனை பழிவாங்க துடித்து அந்த கொலை கேசில் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. முருகன் ஜாமீனில் வெளியே வருகிறார். முருகனின் கொடை விழா நடத்தும் முயற்சிகளுக்கு பல்வேறு விதமான கடுமையான எதிர்ப்புகள் சூரிய நாராயணன் மூலம் வருகின்றன. முருகன் கோவில் நிலத்தை மீட்டு கொடை விழாவை நடத்தினாரா? பஞ்சாயத்தின் போது நடந்த கொலையை யார் செய்தார்கள்? திருநங்கையின் மர்ம மரணத்தின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தின் மீதிக்கதை?பதில் சொல்லும்.
முருகனாக கோகுல் கௌதம் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். க்ளைமேக்ஸில் அவரது உடம்பில் சாமி வந்தவுடன் உடல் மொழியில் ஆக்ரோஷம் காட்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடிக்கும் ஷர்மிஷா, ஒரு கிராமத்துப் பெண்ணின் வேடத்தில் சரியாகப் பொருந்துகிறார், மேலும் ஒரு குறும்புக்கார பெண்ணாக தனது வசீகரமான கண்களால் அனைவரையும் கவர்கிறார். ஷர்மிஷாவுக்கு நிச்சயமாக ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
ஹீரோவின் அப்பாவாக நடிக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், முகபாவனைகளில் நடிப்பை கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அம்மாவாக ஸ்ரீப்ரியா மற்றும் வில்லனாக டாக்டர் சூர்ய நாராயணன், திருநங்கையாக ரஸ்மிதா, பால்ராஜ் மாரியப்பன், நாயகனின் சித்தப்பாவாக வரும் கதாபாத்திரம், உட்பட அனைத்து நடிகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்க போட்டிப்போட்டு அற்புதமான நடிப்பை வழங்கி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சின்ராஜ் ராம் கிராமத்தின் அழகை அழகாக படம் பிடித்துள்ளார்.
எடிட்டர் ரவிச்சந்திரனின் துடிப்பான எடிட்டிங் மற்றும் மிகுந்த ஆர்ப்பாட்டம் இல்லாத விபின் இசையும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு மென்மையாக பயணித்து வலு சேர்த்துள்ளது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு எல்லைச் சாமி உண்டு. அதற்கும் ஒரு வரலாறும் உள்ளது. அந்த வகையில் மதங்களைத் தாண்டிய மனிதர்களின் உணர்வால் ஊரை ஒன்றிணைத்த வல்லவனான சுடலை மாடன் கோவில் கொடை விழாவை மையமாக வைத்து, திரைக்கதையில் காதல், அன்பு, வழிபாடு, மதம், பிரச்சினைகள் மற்றும் கிராம மக்களின் ஒற்றுமை ஆகியவற்றை இணைத்து நல்ல வசனங்களுடன் விறுவிறுப்பாக காட்சி படுத்தி இருக்கிறார் இயக்குனர் இரா.தங்கபாண்டி.
மொத்தத்தில் தெய்வா புரொடக்ஷன் சார்பில் கேப்டன் சிவபிரகாசம், உதயரியன் தயாரித்திருக்கும் மாடன் கொடை விழா – மண்மணக்கும் ஆக்ரோஷ திருவிழா.