Chennai City News

திரு.மாணிக்கம் சினிமா விமர்சனம் : திரு.மாணிக்கம் மனித சமூகத்திற்கு மிக அவசியமான படம் – கல்மனம் படைத்தவனையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும் | ரேட்டிங்: 3/5

திரு.மாணிக்கம் சினிமா விமர்சனம் : திரு.மாணிக்கம் மனித சமூகத்திற்கு மிக அவசியமான படம் – கல்மனம் படைத்தவனையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும் | ரேட்டிங்: 3/5

ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில் ஜிபி ரேகா ரவிக்குமார், சி​ந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில் தயாரித்திருக்கும் திரு.மாணிக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி.

நடிகர்கள்:  பி.சமுத்திரக்கனி – மாணிக்கம், பாரதிராஜா – மாதவபெருமாள், அனன்யா – சுமதி, தம்பி ராமையா – லண்டன் திரும்பிய வணிகர், இளவரசு – பெரியப்பா, நாசர் – வாப்பா, சின்னி ஜெயந்த் – தேவாலய தந்தை சாமுவேல் , வடிவுக்கரசி – கற்பகம், கிரேசி – செல்லம்மாள் , கருணாகரன்- சர்குணம், சுனில்குமார் – கேசவன், சந்திரு, சாம்ஸ் – பஸ் டிரைவர்கள் – நாராயணன், ஸ்ரீமன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:- பாடல் வரிகள்: சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன், சொர்க்கோ, இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சுகுமார், எடிட்டிங் – குணா, கலை- சாஹு, எடிட்டிங் மேற்பார்வை- ராஜா சேதுபதி, இயக்குனர் குழு- சுபாஷ்.கே, சதீஷ் பாலா, கார்த்திக் காமராஜ், தேனா சக்திவேல், ஜெய்சங்கர்.பி, மேக் அப் – ஜி.சுரேஷ் குமார், காஸ்ட்யூமர் – ஆர்.முருகன், ஸ்டண்ட்ஸ் – தினேஷ் காசி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – சேது.சி, மிக்சிங் – டி.உதய் குமார் , டப்பிங் – பரணி ஸ்டுடியோஸ் ராஜா மற்றும் கோவிந்த், ஸ்டில்ஸ் – கே.ராஜ், தயாரிப்பு நிர்வாகி – அழகர் குமாரவேல், வெளியீடு – மாஸ்டர் பீஸ், பத்திரிக்கை தொடர்பு – ஏய்ம் சதீஷ்.

மாணிக்கம் (சமுத்திரக்கனி) தனது மனைவி சுமதி (அனன்யா), இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமியாருடன் குடும்பத்துடன் கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளியில், உள்ளூர் பேருந்து நிலையத்தில் புத்தகக் கடையுடன் இணைந்து லாட்டரி சீட்டு கடை ஒன்றை நடத்தி எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். மிடில் கிளாஸ் மனிதனின் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனைகளை போல் பேச்சு சரியாக வராத மாணிக்கத்தின் இளைய மகள் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை பட்ட நிலையிலும் மாணிக்கம் தனது கொள்கைகளில் உறுதியாகவும் நேர்மையாகவும் இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தனது அன்புக்குரிய குடும்பம் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊர், பெயர் தெரியாத முதியவர் மாதவபெருமாள் (பாரதிராஜா), மனைவியின் மருத்துவ செலவு, மகளின் திருமணம் இவை அனைத்தையும் லாட்டரி சீட்டில் கிடைக்கும் பணத்தை வைத்து சரி செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு மாணிக்கத்திடம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், கையிலிருந்த பணம் தொலைந்துவிட, மனமுடைந்த முதியவர் மாதவபெருமாள் பணத்தை தேடும் போது மாணிக்கம் அவரிடம் அந்த பரிசு சீட்டு கொடுக்கிறார். ஆனால், முதியவர் மாதவபெருமாள் நாளை பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை லாட்டரி சீட்டு அவரிடம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். உடனே மாணிக்கம் அந்த லாட்டரி சீட்டை பெரியவருக்காக எடுத்து வைக்கிறார். மறுநாள் முதியவர் மாதவபெருமாள் தேர்ந்தெடுத்த வைத்த லாட்டரி சீட்டுக்கு ரூ 1.5 கோடி பரிசு அடிக்கிறது. எனவே இந்த லாட்டரி சீட்டை முதியவர் மாதவபெருமாளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணிக்கம் கிளம்பும் போது மனைவி சுமதி போனில் அவரை தொடர்பு கொள்ள, தான் இந்த பரிசு கூப்பனை உரியவரிடம் ஒப்படைக்க வெளியூர் செல்லும் விஷயத்தை கூறுகிறார் மாணிக்கம். அதற்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இந்த லாட்டரி சீட்டை நாமே எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர். ஆனால் மாணிக்கம், முதியவர் மாதவபெருமாளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்து, சுயநலம் கருதாமல் முதியவரை தேடி தனது பயணத்தை தொடர்கிறார். தனது பயணத்தின் போது மாணிக்கம் சந்தித்த இன்னல்கள் என்ன? நேர்மையாக இருந்தால் என்ன நடக்கும்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நேர்மை மற்றும் நெறிமுறை வாழ்க்கையில் மனிதநேயமும் நேர்மையும் நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தை பற்றிய வலுவான செய்தியை கதையின் நாயகனும் முக்கிய வில்லனுமாக (பிறர் பார்வையில்) மாணிக்கம் கதாபாத்திரத்தின் மூலம் சமுத்திரக்கனி அற்புதமாக எடுத்துரைத்துள்ளார்.   எமோஷனல் கலந்த கதைக்களத்தில் சமுத்திரக்கனி வழக்கம் போல அவரது உடல் மொழி மற்றும் கண்கள் மூலம் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

பாரதிராஜா முதியவர் மாதவபெருமாள் கதாபாத்திரத்தில் லிமிடெட் சீன்ஸில் தோன்றி அன்லிமிடெட் எமோஷன்ஸ் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார்.

அனன்யா – மாணிக்கத்தின் மனைவி சுமதி, தம்பி ராமையா – லண்டன் திரும்பிய வணிகர், இளவரசு – சுமதியின் பெரியப்பா, நாசர் – வாப்பா (மாணிக்கத்தின் காட் ஃபாதர்), சின்னி ஜெயந்த் – தேவாலய தந்தை சாமுவேல், வடிவுக்கரசி – முதியவர் மாதவபெருமாள் மனைவி கற்பகம், கிரேசி – செல்லம்மாள் , கருணாகரன்- சர்குணம், சுனில்குமார் – கேசவன், சந்திரு, சாம்ஸ் – பஸ் டிரைவர்கள் – நாராயணன், ஸ்ரீமன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தங்களுக்கே உரிய தனித்துவமான நடிப்பு திறனை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர்.

தனது வாழ்க்கையை நேர்மையுடன் வாழும் ஒரு மனிதனின் கதையை கணிசமாக மேம்படுத்துகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.

ஒளிப்பதிவு – சுகுமார் தத்ரூபமாக காட்சி படுத்தி உள்ளார்.

எடிட்டர் குணாவின் நேர்த்தியான படத்தொகுப்பு காட்சிக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது.

பேராசையால் இயக்கப்படும் உலகில், பணத்திற்காக மக்கள் எப்படி மாறுகிறார்கள்? நேர்மையுடனும், தெளிவுடனும் வாழும் சாமானியனின் கதையில் குடும்பப் போராட்டங்கள், குடும்ப உறவுகளின் உணர்வுகள், பரபரப்பான காட்சிகள் என திரைக்கதை உருவாக்கி, மனித சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான உணர்வுப்பூர்வமான படைப்பை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

மொத்தத்தில் ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில் ஜிபி ரேகா ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில் தயாரித்திருக்கும் திரு.மாணிக்கம் மனித சமூகத்திற்கு மிக அவசியமான படம் – கல்மனம் படைத்தவனையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

Exit mobile version