சேவகர் சினிமா விமர்சனம் : சேவகர் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கவில்லை | ரேட்டிங்: 2/5

0
277

சேவகர் சினிமா விமர்சனம் : சேவகர் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கவில்லை | ரேட்டிங்: 2/5

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ், சுனில் குமார் பி ஜி, இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்து தயாரித்துள்ள படம் சேவகர். சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர்கள் : பிரஜின், ஷகானா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் , மனோ, ஜமீன்குமார், ஷர்புதீன், சந்துரு, ராஜ்குமார்.
இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார், நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன், சவுண்ட் இன்ஜினியர் கதிர். தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.
ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

தென்காசியில் வாழ்ந்து வரும் நாயகன் பிரஜின், நான்கு நண்பர்களுடன் சேர்ந்து நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்டு ஊர் மக்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். இதனால் அந்த ஊர் எம்.எல்.ஏ மற்றும் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அமைச்சர் ஆடுகளம் நரேன் இவர்களுக்கு ஊர் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கும்  பிரஜின் பகையாளியாக மாறுகிறார். அமைச்சர் ஆடுகளம் நரேன், அவருக்குத் துணை போகும் போலீஸ் மற்றும் ரவுடிகள் மூலம் பிரஜினுக்கு தொல்லைகள் கொடுக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்களின் சேவகனாக தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் ஊர் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் ஆடுகளம் நரேனின் எண்ணங்களை முறியடித்து எச்சரிக்கை விடுகிறார். இதனால் அவர் மீது அமைச்சருக்கு மேலும் கோபம் அதிகரித்து அவரது குடும்பத்திற்கு தொல்லை கொடுக்க பிரஜினின் வீட்டுக்கு சென்று அவருடைய தாய் மற்றும் தங்கையை துன்புறுத்துகிறார்கள். அதே போல், பிரஜினின் தந்தையை காவல் நிலையத்தில் அழைத்து வந்து கண் மூடித்தனமாக அடிக்கிறார்கள். தந்தையை தேடி காவல் நிலையம் வரும் பிரஜின் அங்கே தன் தந்தையை லாக்கப்பில் வைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரவதை செய்வதை பார்த்து கோபப்பட்டு போலீசையும் எதிர்த்துத் தாக்கி, போலீஸ் இன்ஸ்பெக்டரை காவல் நிலையத்தில் அடித்துக் கொல்கிறார். இதனால் பிரஜினை சமூக விரோதி மற்றும் தீவிரவாதி என்று பழி சுமத்தி தனிப்படை அமைத்து பிரஜின் மற்றும் நண்பர்களை பிடிக்க போலீஸ் திட்டம் போடுகிறது. தீவிரவாதி என்ற பழியோடு தலைமறைவாக வாழும் பிரஜின், தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக எதிரிகளை வேட்டையாடும் அவரின் எண்ணங்களை புரிந்து, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்   காவல்துறை அதிகாரி போஸ் வெங்கட். அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், சினிமாவில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று போராடி கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயமான உழைப்பை தந்துள்ளார். வளர்ந்து வரும் நல்ல திறமைசாலியான பிரஜின், இனி வரும் காலங்களில் கதை தேர்வில் முழு கவனம் செலுத்தி நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நிச்சயம் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் ஷகானா ஒரு சில காட்சிகளில் வந்து பிறகு காணாமல் போகிறார். அவருக்கான காட்சி அமைப்பு சரியாக திரைக்கதையில் சேர்க்கப்படவில்லை.

நேர்மையான காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அமைச்சராக வரும் ஆடுகளம் நரேன் வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.

மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித், மனோ, ஜமீன் குமார், ஷர்புதீன், சந்துரு, ராஜ்குமார் உட்பட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

சமுதாய சீர்கேட்டை தட்டிக் கேட்கும் வழக்கமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து பலவீனமான திரைக்கதை அமைத்து அதை காட்சி படுத்தும் விதத்தில் நம்மை கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபிநாத்.

மொத்தத்தில் சில்வர் மூவீஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள சேவகர் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கவில்லை.