சார் சினிமா விமர்சனம் : சார் –  குருவாக போற்றப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் | ரேட்டிங்: 3.5/5

0
353

சார் சினிமா விமர்சனம் : சார் –  குருவாக போற்றப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: விமல், சாயா தேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெய பாலன், விஜய் முருகன், சரவண சக்தி, ஸ்ரீராம கார்த்திக், பிரானா, எலிசபெத்.

கதை, திரைக்கதை, இயக்கம்: போஸ் வெங்கட். ஒளிப்பதிவு இனியன் ஜே ஹரிஷ்,இசை சித்து குமார், எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங், கலை இயக்கம் பாரதி புத்தர். பாடல் வரிகள் – விவேகா, அந்தக்குடி இளையராஜா மற்றும் இளங்கவி அருண். ஒலி கலவை சிவகுமார். நிர்வாகத் தயாரிப்பாளர் கண்ணன்.
தயாரிப்பாளர்: சிராஜ் எஸ், நிலோஃபர் சிராஜ்
தயாரிப்பு பேனர்: எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ்
இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிடுகிறது.
மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ்2மீடியா

1950 – 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் நடக்கும் கதைதான் இந்த ‘சார்’. மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் ஆதிக்க சாதி, மூடநம்பிக்கை கொண்ட கிராமவாசிகள் மற்றும் ஏழைகளை அடக்குவதில் உறுதியாக இருக்கும் சக்தி வாய்ந்த கோலோச்சும் குடும்ப தலைவர் பெரியவர் (ஜெயபாலன்) ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் அந்த ஊர் சாமியாடியும் ஆவார். அந்த நேரத்தில் மாங்கொல்லை சுற்றி உள்ள 35 கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை என்பதை உணர்ந்து மாங்கொல்லை கிராமத்துக்கு வரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை வாத்தியார் அந்த ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து கல்வி போதிக்க முயற்சிக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். கோலோச்சு குடும்ப தலைவர் பெரியவரிடம் பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை வழங்குமாறு கேட்கிறார்கள். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மிரட்டவும் செய்கிறார். அதே ஊரில் இருக்கும் பெரியவரின் தம்பி நல்ல குணம் படைத்தவர். அவருடைய உதவியுடன், அவர் கொடுத்த நிலத்தில் அண்ணாதுரை வாத்தியார் பள்ளிக்கூடம் கட்டுகிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று அவர்கள் வாழ்வாதாரம் உயர்ந்தால் பல கேள்விகளை கேட்பார்கள் என்பதில் பிடிவாதமாக இருக்கும் பெரியவர் சாதி பெருமையும் சேர்ந்து கொள்ள கடவுள் பக்தியை அந்த ஊர் மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார். அந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தை இடிக்க வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அவரது சூழ்ச்சியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அண்ணாதுரை வாத்தியார் தெளிவாக புரிய வைக்கிறார். மக்கள் பெரியவரை அவமானப்படுத்துகிறார்கள். அவமானத்தால் மரணப்படுக்கையில் இருக்கும் பெரியவர் தன் பேரன் சக்திவேலிடம் (சிராஜ் எஸ்), அந்த பள்ளியை எப்படியாவது இடித்து விட வேண்டும் அதற்காக அவர்களுடன் ‘உறவாடி கெடு’ என வாக்குறுதியை வாங்கிவிட்டு மரணிக்கிறார். இந்நிலையில் பள்ளி ஆரம்பித்த பெரியவரை அடித்து போட்டு பைத்தியமாக்குகிறார்கள். ஆனால் அவரது மகன் அரசன் (சரவணன்) படித்து அந்தப் பள்ளியை தன் பொறுப்பில் எடுத்து ஆரம்பப் பள்ளியை நடுநிலைப்பள்ளி ஆக்குகிறார். சரவணன் மகன் விமல் அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக அந்த ஊர் மக்களை கல்வியறிவில் மேம்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். அரசன் ஓய்வு பெறும் போது, அரசு உதவி பெறும் பள்ளியை தொடர்ந்து நடத்த ராமநாதபுரத்திலிருந்து சொந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிரியரான மகன் ஞானம் (விமல்). பெரியாரின் பேரன் சக்திவேல் சிறுவயதிலிருந்தே ஞானத்தின் நெருங்கிய நண்பன் ஆவான். இப்போது சக்திவேல் சாமியாடியாக இருந்து, பள்ளிக்கூடத்தை இடிக்கும் முயற்சிகளை மறைமுகமாக தொடர்கிறான். அதுவும் தோல்வியடைய அரசனை இப்போது பைத்தியம் ஆக்குகிறார்கள். கோலோச்சு குடும்பத்திற்கு எதிராக போராடி, கல்வி உரிமைகளுக்கான போராட்டத்தில் ஞானம் களம் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் சக்திவேலின் சூழ்ச்சியால் ஞானத்தையும் பைத்தியம் என புரளி கிளப்புகிறார்கள். உண்மையில் ஞானத்திற்கு என்ன ஆனது? பேரனான சக்திவேல் தாத்தாவின் சொல்படி உறவாடி அந்த பள்ளிக்கூடத்தை இடித்தாரா? ஞானம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றினாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

ஞானம் என்ற கதாபாத்திரத்தில் விமல் ஒரு நல்ல நடிப்பை வழங்குகிறார். ஊர்மக்கள் தன்னை அடிக்கும் போது தன் தாயே  தன்னை பைத்தியம் என கூறும் இடத்தில் அவரது உணர்ச்சிகரமான நடிப்பு கவனிக்க வைக்கிறது.

கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி முக்கியம், என்று நினைக்கும் ஆசிரியர் அரசன் கதாபாத்திரத்தில் சரவணன் கச்சிதமாக பொருந்துகிறார். அவர் கதாபாத்திரத்தை மிக எளிமையாகவும் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது குணச்சித்திர நடிப்பு பாராட்டத்தக்கது.

வள்ளி நாயகியாக சாயா தேவி சக ஆசிரியராக திரைக்கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு தந்துள்ளார்.

அரசனின் மனைவியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ரமா. ஊர் மக்கள் தன் கணவனை பைத்தியம் என கூறும் போதும், ஊர்மக்கள் தன் மகனை அடிக்கும் போது அவரை காப்பாற்ற தன் மகன் ஒரு பைத்தியம் என அம்மாவே கூறும் இடத்தில் அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது.

தாத்தாவின் ஆசையை பூர்த்தி செய்ய நண்பர்களுடன் உறவாடி நண்பர்களை போட்டுத் தள்ளும் வழக்கமான சூழ்ச்சி வில்லனாக சிராஜ் எஸ் திறம் பட செய்துள்ளார்.

ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரானா, ஸ்ரீராம் கார்த்திக், எலிசபெத் மற்றும் பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், உட்பட அனைவரும் தீவிரமான காட்சிகளை நன்றாக கையாண்டு குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இனியன் ஹாரிஸ்  ஒளிப்பதிவும், சித்துகுமாரின் இதயத்தைத் தொடும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குனர் பாரதி புத்தர் இருவரும் 1950 – 60 -80 ஆகிய காலகட்டங்களை நன்றாக பதிவு செய்துள்ளனர்.

பழமைவாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையும், கல்வி அறியாத மக்களுக்கு அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, கொண்டு சேர்க்க நினைக்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவையை, ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த கல்வியை, கிடைக்க விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாக சொல்லி இருக்கிறார். மேலும், நடிப்பைத் தவிர, உணர்ச்சிகரமான காட்சிகளையும் நேர்த்தியாக காட்டி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

மொத்தத்தில் எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் எஸ், நிலோஃபர் சிராஜ் இணைந்து தயாரித்துள்ள சார் –  குருவாக போற்றப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.