கேங்கர்ஸ் விமர்சனம் : | ரேட்டிங்: 4/5
ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ் அருண்குமார் தயாரித்திருக்கும் கேங்கர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.
இதில் சுந்தர் .சி – சரவணன், வடிவேலு – சிங்காரம் , காத்ரின் தெரசா- சுஜிதா, வாணிபோஜன் – மாதவி , முனிஷ்காந்த் – பட்டைசாமி, பக்ஸ் – கணக்கு வாத்தியார், காளை -அமலதாசன், ஹரிஷ் பேரடி – முடியரசன், மைம் கோபி -மலையரசன், அருள்தாஸ் – கோட்டையரசன் , சந்தானபாரதி – ஆகாஷ், விச்சு – ஹெட்மாஸ்டர் ,மாஸ்டர் பிரபாகர் – சூரி, மதுசூதன் ராவ் -மினிஸ்டர், ரிஷி – முத்தரசன் , கௌரவ தோற்றத்தில் – விமல் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை -சி . சத்யா, திரைக்கதை வசனம் – வெங்கட்ராகவன், ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி, படத்தொகுப்பு – பிரவீன் ஆன்டனி, கலை இயக்குனர் – குருராஜ், சண்டைப்பயிற்சி – ராஜசேகர், நடனம் – பிருந்தா , தீனா, பாடல்கள் – பா.விஜய், அருண்பாரதி , லாவரதன்,சூப்பர் சப்பு, மெட்ராஸ் மிரன், வெட்டிப்பய வெங்கட், மக்கள் தொடர்பு – சதீஷ் (ஏய்ம்)
படத் துவக்கத்தில் அரசன் கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஒரு ஏழை பள்ளி மாணவி காணாமல் போகிறாள். அந்த மாணவிக்கு பல உதவிகள் செய்து வரும் அதே பள்ளியைச் சேர்ந்த கணினி அறிவியல் ஆசிரியர் சுஜிதா (கேத்தரின் தெரெசா) மாணவி காணாமல் போனதை அறிந்து முதல்வர் தனி பிரிவிற்கும், காவல்துறைக்கும் மின்னஞ்சல் மூலமாக மாணவியின் திடீர் மாயமானதையும், பள்ளியில் நடக்கும் சட்ட விரோத செயல்களையும் குறிப்பிட்டு புகார் அனுப்புகிறார். இதனை அடுத்து காவல்துறையிடமிருந்து ரகசிய போலீஸ் அதிகாரியை ஆசிரியராக அனுப்பி பள்ளியில் நடக்கும் அநியாயங்களை கண்டுபிடிக்க அனுப்புவதாக பதில் வருகிறது. இதனிடையே பள்ளியில் கணித ஆசிரியர் பக்ஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக சரவணன் (சுந்தர் .சி) புதிதாக வந்து சேருகிறார்கள். பிடி ஆசிரியராக பல ஆண்டுகள் பணி புரியும் சிங்காரம் (வடிவேலு) புதிதாக சேரும் பிடி ஆசிரியர் சரவணன் ஆகியோருக்கிடையே போட்டி நிலவுகிறது. வடிவேலு ஒரு தலையாக ஆசிரியர் சுஜிதாவை காதலிக்கிறார். இதனிடையே சுஜிதா காணாமல் போன மாணவியை மட்டும் தேடும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார். அவ்வூரில்; அரசியல் தாதாக்களாக வலம் வரும் மலையரசன் (மைம் கோபி) மற்றும் அவரது தம்பி கோட்டையரசன் (அருள்தாஸ்) பள்ளியிலும் வெளியிடங்களிலும் அராஜகமாக நடந்து கொள்வதையும் பள்ளி வளாகத்தில் லாரிகளில் தண்ணீர் கேன்; சப்ளை செய்வது போல் கள்ளச்சாராயம் விற்பது, சமூக விரோத செயல்களை செய்வதற்கு பள்ளியை பயன்படுத்துவதை தட்டி கேட்கிறார் ஆசிரியர் சுஜிதா. இதனால் மலையரசன் சகோதரர்களின் கோபத்திற்கு ஆளாகி சுஜிதா அவமானப்படுத்தப்படுகிறார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு சரவணன் அந்த சகோதரர்களை தனித்தனியாக வியூகம் அமைத்து முகத்தை மறைத்து கொண்டு அவர்களை தாக்குகிறார். இந்த தாக்குதலைச் செய்வது சிங்காரம் தான் என்பது போல் சம்பவங்கள் காரணமாகிறது.அதே சமயம் சுஜிதா ரகசிய போலிஸ் சரவணன் என்று நம்புகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சரவணன் போலீஸ் இல்லை என்பது தெரிய வருவதும்,அவருடைய ஃபிளாஷ்பேக்கையும் சுஜிதா தெரிந்து கொள்கிறார். அதாவது மந்திரி மதுசூதன் ராவ் தன் கீழ் செகரட்டரியாக வேலை செய்யும் சரவணன் மனைவி மாதவியிடம்(வாணிபோஜன்) தேர்தல் செலவுகளுக்காக நூறு கோடியை ஒரு லாரியில் முடியரசன் (ஹரிஷ் பேரடி) துணையோடு அனுப்பி வைக்கிறார். இந்த பணத்தை முடியரசன், தன் சகோதரர்களான மலையரசன், கோட்டையரசன் துணையோடு கொள்ளையடிக்க திட்டமிட்டு மாதவியை கொன்று எறித்து விட்டு பணத்தை எடுத்துச் செல்கின்றனர். பின்னர் முடியரசன் இறந்த விட்டதாக உருவகம் செய்து அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு மந்திரியை நம்ப வைத்து, மாதவி தான் பணத்தை எடுத்து ஒடி விட்டதாக கட்டுக்கதை கட்டி நம்ப வைத்து மந்திரியின் நம்பகமிக்க ஆட்களாக மாறி அராஜகம் செய்தது மட்டுமில்லாமல், தன்னையும் சிறையில் தள்ளி சித்ரவதை செய்து துன்புறுத்தி, தற்போது விடுதலையாகி வெளியே வந்ததாகவும், இவர்களை பழிக்கு பழி வாங்கவே இந்த ஊருக்கு வந்ததாக சரவணன் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் பதுக்கிய நூறு கோடியை கண்டுபிடித்து அதனை கொள்ளையடிக்க உதவி செய்தால் பங்கு தருவதாக சிங்காரம், சுஜிதா ஆகியோருடன் தெரிவிக்கிறார். இதற்கு சிங்காரம், சுஜிதா கூட்டு சேர்ந்து சரவணனுக்கு உதவி செய்தார்களா? இவர்களுடன் இந்த கொள்ளை சம்பவத்திற்கு யாரெல்லாம் இணைந்தார்கள்? இவர்களால் நூறு கோடி பதுக்கி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்ததா? அரசியல் பின்பலம் கொண்ட சகோதரர்களின் பிடியிலிருக்கும் பணத்தை எப்படி கொள்ளையடித்தார்கள்? காணாமல் போன மாணவி என்ன ஆனாள்? மாணவியை கண்டு பிடிக்க முடிந்ததா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே பல கேள்விகளுக்கு விடை படத்தின் மீதிக்கதை.