அஸ்திரம் சினிமா விமர்சனம் : அஸ்திரம் மர்மத்தில் மூழ்கடிக்கும் மர்ம திரில்லர் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்: ஷாம், நீரா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜேஆர் மார்ட்டின், வெண்பா, விதேஷ் யாதவ், ரஞ்சித் டி.
இயக்கம்: அரவிந்த் ராஜகோபால்
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
ஒளிப்பதிவு: கல்யாண் வெங்கட்ராமன்.
படத்தொகுப்பு: பூபதி வேதகிரி
தயாரிப்பு: பெஸ்ட் மூவீஸ் தனசண்முகமணி
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்
ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடித் தோற்றவர்களை, தங்களைத் தாங்களே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய வைத்த கதை ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. கொடைக்கானல் பார்க் ஒன்றில் இளைஞன் ஒருவன் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்தி கிழித்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இன்ஸ்பெக்டர் ஷாம் ஒரு செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க போகும்போது, முகம் தெரியாத நபர் ஒருவர் அவரது தோள்பட்டையில் சுட அதனால் அவர் மருத்துவ விடுப்பில் ஓய்வில் இருக்கிறார். மேலும் அவரது மனைவி நிரா ஒரு பத்திரிக்கையாளர். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விடுகிறது. அதன் பின் அவரது மனைவிக்கு குழந்தை உருவாகவில்லை. அந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். எஸ்பி அருள் சங்கர் விடுப்பில் இருக்கும் ஷாமின் திறமை மீது உள்ள நம்பிக்கையில் இந்த கேஸை விசாரிக்க அவரிடம் ஒப்படைக்கிறார். அவரின் விசாரணையின் போது மேலும் இரண்டு பேர் வெவ்வேறு இடங்களில் வயிற்றை கிழித்துக்கொண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்கின்றனர். இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை என்பதை உணர்கிறார் ஷ்யாம். தனது உதவியாளர் உதவியுடன் இந்த வழக்கை எப்படியாவது தீர்த்து விட வேண்டும் என்று நினைக்கும் அவர், ஒரே பாணியில் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களை பற்றி விசாரிக்கிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் நன்றாக செஸ் விளையாடும் திறமை இருப்பதை அறிந்து கொள்கிறார். இந்நிலையில், ஷாமின் பள்ளி தோழர் என்று அறிமுகமாகும் மர்ம நபர் ஒருவர், ஷாமுக்கு மட்டுமே தெரிந்த வழக்கு விசாரணைகளை பற்றி ஒவ்வொன்றாக அப்படியே சொல்லும் போது ஷாமுக்கு அதிர்ச்சி ஆகிறது. அந்த நபர் இந்த மர்மமான முறையில் ஏற்படும் தற்கொலைக்கு மார்டின் தான் காரணம் என்று கூறிவிட்டு அவர் கண் முன்னிலையில் அந்த பழைய நண்பரும் ஷாமின் வீட்டிலேயே தன் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரிழக்கிறார். மூன்றாவதாக இறந்தவருக்கும் நன்றாக செஸ் விளையாடும் திறமை இருப்பதை அவர் அறிந்து கொள்கிறார். தனது வீட்டில் நடந்த சம்பவத்துக்கு பிறகு ஷாம் இடமிருந்து, அவர் விசாரித்துக் கொண்டிருந்த கேஸ் வேறு ஒரு அதிகாரியிடம் எஸ் பி ஒப்படைக்கிறார். யார் இந்த மார்ட்டின்? மார்ட்டினுக்கும் ஷ்யாமுக்கும் என்ன சம்பந்தம்? மர்மமான முறையில் நடக்கும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன? செஸ் விளையாட்டுக்கும் இந்த தற்கொலைக்கும் என்ன தொடர்பு? ஷாம் இந்த கேஸை எப்படி முடித்து வைத்தார்? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.
ஷாம், தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். சோகம், வேதனை மற்றும் தீவிரமான உறுதியை ஒரு சிறந்த நடிப்பில் சித்தரிக்கிறார்.
நீரா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜேஆர் மார்ட்டின், வெண்பா, விதேஷ் யாதவ், ரஞ்சித் டி. உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி மர்ம திரில்லர் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி ஆகியோரின் பணி, த்ரில்லரின் உணர்ச்சிகரமான துடிப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
சதுரங்க விளையாட்டில் வெற்றி பெறும் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டும் ஒரு வித்தியாசமான கதையை அற்புதமான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் உருவாக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால்.
மொத்தத்தில் பெஸ்ட் மூவீஸ் சார்பில் தனசண்முகமணி தயாரித்திருக்கும் அஸ்திரம் மர்மத்தில் மூழ்கடிக்கும் மர்ம திரில்லர்.