Chennai City News

அமரன் சினிமா விமர்சனம் : ‘அமரன்’ ஒட்டுமொத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். ஜெய் ஹிந்த் | ரேட்டிங்: 4/5

அமரன் சினிமா விமர்சனம் : ‘அமரன்’ ஒட்டுமொத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். ஜெய் ஹிந்த் | ரேட்டிங்: 4/5

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அமரன்’.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, கீதா கைலாசம், லல்லு,ரவிசங்கர், மிர் சல்மான், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அன்பு தாசன், மைக்கேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குநர் : ராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்பாளர்கள் : கமல்ஹாசன்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவாளர்: சிஎச் சாய்
படத்தொகுப்பாளர் : ஆர்.கலைவாணன்
வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு, எஸ்2 மீடியா சதீஷ்

சென்னையில் இருந்து புது டெல்லிக்கு விமான பயணத்தில் காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவர் முகுந்தின் (சிவகார்த்திகேயன்) வாழ்க்கைக் கதையை விவரிக்கும் இந்துவின் (சாய் பல்லவி) குரலுடன் கதை தொடங்குகிறது. முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ஐந்தாம் வகுப்பிலிருந்தே தனது இலக்குகளை நிர்ணயிக்கிறார். சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமிக்கு  ஒரு களப் பயணம் அவருக்குள் ராணுவத்தில் சேருவதற்கான விதையை விதைக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடரும்போது, அவர் தனது காதலி இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இந்துவின் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அவர்கள் இறுதியில் இந்துவின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். மேஜராக பதவி உயர்வு பெற்ற பிறகு, முகுந்த் இந்திய இராணுவத்தில் 44 வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் தளபதியாகிறார். அவர் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அங்குள்ள ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டங்களை வகுக்கிறார். கடுமையான காயங்களைச் சந்தித்த போதிலும், பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு முகுந்த் வெற்றிகரமான பணியை தொடர்கிறார். இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் ஒரு சிவிலியன் வீட்டில் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றி அறிந்து ஒரு குழுவை வழிநடத்திகிறார். சிப்பாய் விக்ரம் சிங்குடன் சேர்ந்து, பலத்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்து வெற்றிகரமாக வீட்டிற்குள் நுழைகின்றனர். ஒருசில தீவிரவாதி கொல்லப்பட்டனர், ஆனால் அவர்களின் இலக்கான ஹிஸ்புல் முஜாகிதீன் மூத்த தளபதி அல்டாஃப் வானி தப்பி ஓடிவிட தீவிரவாதி பதுங்கியிருந்த ஒரு சிமென்ட் அவுட்ஹவுஸில் மேஜர் முகுந்த் தீவிரமாக சண்டையிட்டு தீவிரவாதி அல்டாஃப் வானியை சுட்டுக்கொள்கிறார். இருவருக்கும் நடந்த தாக்குதலில் தீவிரவாதி அல்டாஃப் வானி சுட்டு கொன்றதில் அவருக்கு காயம் ஏற்பட  வுட்ஹவுஸ் வெளியே வந்து சரிந்து விழுந்து நாட்டைக் காக்க வீரமரணம் அடைகிறார். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற கதாபாத்திரத்தில் தன்னை உட்பொதித்து, தனது நடிப்புத் திறமையால் படத்தைத் தோளில் சுமந்து, இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் முக்கிய தீவிரவாதி அல்டாஃப் வானியை கொன்று உயிர் தியாகம் செய்த அவரின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பாத்திரத்திற்குத் தேவையான தீவிரத்தன்மையையும் மரியாதையையும் கச்சிதமாக சித்தரித்து மிடுக்கான உடல்மொழி மற்றும் ஆக்‌ஷன்களின் மூலம் அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளார்.

சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாக தனது இயல்பான நடிப்பால் பல அழுத்தமான தருணங்களில் பலவிதமான உணர்ச்சிகளைக் நேர்த்தியாக வெளிப்படுத்தி திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

சக ராணுவ வீரராக புவன் அரோரா, அம்மாவாக கீதா கைலாசம், ராணுவ அதிகாரியாக ராகுல் போஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, லல்லு, ரவிசங்கர், மிர் சல்மான், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அன்பு தாசன், மைக்கேல் உட்பட அனைத்து நடிகர்களும் நிறைவான பங்களிப்பைத் தந்துள்ளனர்.

குறிப்பாக அம்மாவாக கீதா கைலாசம் மற்றும் மனைவியாக சாய் பல்லவி  நம்மை பல இடங்களில் கண்கலங்க வைத்துள்ளனர்.

ஆர்.கலைவண்ணின் படத்தொகுப்பு. ஜீ.வி.பிரகாஷின் இசை மற்றும் பின்னணி இசை, அன்பறிவ் ஆக்ஷன் காட்சிகள், சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் தீவிரத்தை உணர்த்த முதுகெலும்பாக அமைந்துள்ளது.

ஷோபியான் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய கடும் துப்பாக்கிச் சூட்டில் 31 வயதான வரதராஜன் கொல்லப்பட்டார். இருப்பினும், அவர் இறப்பதற்கு முன் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார். “முன்மாதிரியான தலைமைத்துவ திறன்கள், மன தைரியம் மற்றும் விரைவான நடவடிக்கை” ஆகியவற்றைக் காட்டியதற்காக அவருக்கு மரணத்திற்குப் பின் அசோக சக்கரம் வழங்கப்பட்டது. ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாவின் மிக அச்சமற்ற நவீன இராணுவ ஹீரோக்களின் உண்மைக் கதைகள் என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை நிகழ்வுகள், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் வார்த்தைகள் மூலம், அவரது வலிகள் மூலம், சிறந்த தொழில்நுட்பக் குழு மற்றும் சிறந்த நடிகர்களின் உதவியுடன், கதையை அதன் உண்மை வடிவில் வழங்குவதற்கு சிரத்தை எடுத்து, வலுவான திரைக்கதையை உருவாக்கி மற்றும் நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்திற்கு ஒரு பொருத்தமான அஞ்சலியை படைத்து ஒட்டு மொத்த இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

மொத்தத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் ‘அமரன்’ ஒட்டுமொத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். ஜெய் ஹிந்த்.

Exit mobile version