பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களைA ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’. (World International Tamil Film Association – WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ரஷீம் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “நான் தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளவன். எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் நடக்கும், தெய்வம் துணை இருக்கும், என்ற நம்பிக்கையில் அதில் ஈடுபடுவேன், அந்த வகையில் தான் சர்வதேச அளவிலான இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது நடக்கும், நடக்காது, என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை, ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும், என்று தான் நினைத்தேன். அது நடக்கவில்லை என்றாலும், ரஜினிகாந்தின் அண்ணனை வைத்து இன்று படம் எடுத்திருக்கிறேன். யார் படத்திலும் நடிக்காத ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று என் படத்தில் நடித்திருக்கிறார். தெய்வத்தின் அருளால் தான் அவர் என் படத்தில் நடித்திருக்கிறார். இன்றைய விட்ஃபா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கங்கை அமரன் சார் எவ்வளவு பெரிய மனிதர், அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது கடவுளின் அருள் தான். இயக்குநர் பேரரசுக்கு தெரியாமல் அவரது பழனி படத்தில் ஆறு நாட்கள் பயணித்திருக்கிறேன், அதனால் அவர் என்னுடைய குருநாதர். இயக்குநர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.வி.உதயகுமார் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர். சிறு முதலீட்டு படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சார், ஆகியோரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
’மாம்பழம் திருடி’ என் ஆறாவது படம், நான் இயக்கும் ஏழாவது படம், விட்ஃபா தயாரிக்கும் முதல் படமாகும். இதில், இலங்கையில் பிரபலமாக இருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். விட்ஃபா தயாரிக்கும் அனைத்து படங்களையும் நான் மட்டுமே இயக்க மாட்டேன். விட்ஃபா ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்களை தயாரிப்பதோடு, பத்து படங்களை வெளியிட போகிறது. ஆக, ஆண்டுக்கு 12 படங்கள் விட்ஃபா மூலம் வெளிவரும். இதன் மூலம், இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல புதுமுகங்களை உருவாக்கப் போகிறோம்.
நாங்கள் ஒரு கூட்டமைப்பாக இருந்து திரையுலகிற்கான பணியை மேற்கொள்ளப் போகிறோம். இதுவரை எங்கள் அமைப்பில் 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 40 பேர் அமைப்பின் முக்கிய நிர்வாகத்திலும், 150 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். சாதாரன உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் பேன்ஸ் கிளப் உறுப்பினர்களாக லட்சக்கணக்கானோர் இணைய உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், சுமார் 1000 பேர் என 50 ஆயிரம் பேர் விட்ஃபா-வில் இணைய இருக்கிறார்கள்.
விட்ஃபாவில் உள்ள உறுப்பினர்களுக்கு, நாங்கள் வெளியிடும் படங்களை பார்க்க 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இன்று ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுமானால் எவ்வளவு கட்டணம் என்பது தெரியும். அதில் 50 சதவீதம் சலுகை என்றால் உங்கள் செலவு எவ்வளவு குறையும் என்று பாருங்கள். இதே, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை இருந்தால், உங்கள் செலவு பாதியாக குறையும். நாங்கள் சாதாரண படங்களை வெளியிட மாட்டோம். அதேபோல் தயாரிப்பதிலும் நல்ல கதைகளை கேட்டு தான் தயாரிப்போம், அதற்கான குழுவும் எங்களிடம் இருக்கிறார்கள்.
விட்ஃபாவின் வெளியிடம் முதல் திரைப்படமான ‘மாம்பழ திருடி’ படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வரப்போகிறது. அவரது அண்ணன் நடித்திருப்பதால், ரஜினிகாந்தின் பெயர் நிச்சயம் வரும். இப்படி தான் எங்களது ஒவ்வொரு படங்களையும் திட்டமிட்டு தயாரிப்பதோடு, படங்களை வெளியிடவும் செய்வோம்.
எங்களுடைய அமைப்பின் கொளை மற்றும் சட்டத்திட்டங்கள் மிக நேர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்பை உருவாக்கிய என்னை கூட வெளியேற்றும் வகையில் இதன் சட்டதிட்டங்கள் உள்ளது. தலைவர், செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் தவறு செய்தால், மற்ற நிர்வாகிகள் செயற்குழுவை கூட்டி, அவர்களை வெளியேற்றும் அளவுக்கு இதன் கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறோம். இப்படி ஒரு வலுவான அமைப்பில் சேர சிறு கட்டணம் உள்ளது, அது வெறும் ரூ.200 மட்டுமே.
என் அப்பா சமூக சேவகர், ஒரு மிகப்பெரிய கல்லூரியின் தலைவராக இருந்தார், பொதுநல அமைப்புகள் பலவற்றின் தலைவராகவும் இருந்தார். அவர் சொன்னது, “நீ இறந்தால் 40 பேர் அழ வேண்டும்” என்பது தான். அதனால், தான் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரை விட உயர்ந்த பதவியில் இருந்த நான் அந்த வேலையை விட்டுவிட்டு திரைத்துறைக்கு வந்தேன், இந்த துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய முடியும், என்ற நம்பிக்கையில் இந்த துறைக்கு வந்திருக்கிறேன். இன்று சொல்கிறேன், விட்ஃபாவின் இரண்டாவது மாநாடு நேரு ஸ்டேடியத்தில் நடக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 150 பேரின் வீட்டில் ஒரு கார் இருக்கும். இதற்கான பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். உலகம் முழுவதும் இருக்கும் இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் சந்தித்து எங்கள் அமைப்பு பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறோம். எனவே, விட்ஃபா மூலம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்ல சினிமா மீது ஆர்வம் உள்ள சாமானியர்கள் அனைவருக்கும் உதவி செய்யப் போகிறோம்.” என்றார்.
இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ”இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்து வந்தேன், இங்கு வந்து பார்த்ததும் ஏதோ புதிய சங்கமாக இருக்குமோ என்று பயந்து விட்டேன். இருக்கிற சங்கத்துல இருப்பவர்களுக்கே இங்கு வேலை இல்லை, இது என்னட புது சங்கமா என்று பயந்துட்டேன். ஆனால், அப்படி அல்லாமல் ஒரு அமைப்பாக சினிமாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியே வர தமிழ் சமூகத்தை ஒன்று சேர்த்தது மட்டும் இன்றி, அந்த படத்தின் டிக்கெட் விற்பனையும் இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். இங்கு வெற்றி பெறுவதற்உ திறமை மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்ட்டம் வேண்டும், ஆளும் கட்சியின் சப்போர்ட் வேண்டும், அது இருந்தால் தான் தியேட்டர் கிடைக்கும், படம் வெளியாகும். ஆனால், இது எதுவும் இல்லை என்றாலும், ஒரு அமைப்பை உருவாக்கி, யாருக்கும் எதிராக நிற்காமல், ஒரு நல்ல முயற்சியை விட்ஃபா மூலம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பை பற்றி கேட்ட போதே, நானே சேர்ந்து விடலாமா என்று யோசித்தேன். இந்த நேரத்தில், இயக்குநர்கள் சங்க தலைவராக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், நல்ல கதையோடு வருகின்ற இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு விட்ஃபா அமைப்பு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான ரஷீம், தன்னுடைய வெற்றியை தொடர்ந்து அடுத்தவர்களையும் வெற்றியாளர்களாக மாற்றுவதற்காக இந்த விட்ஃபா அமைப்பை தொடங்கியிருக்கிறார். அவருடைய ஆர்வமும், முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். விட்ஃபா வெற்றிகரமாக வளர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.
விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசுகையில், “ரஷீம் மிகச்சிறந்த ஒரு மாபெரும் திரையுலகை வாழ வைக்கும் வளர்க்கிற அற்புதமான திட்டத்தை நம்மிடையே விளக்கியிருக்கிறார். திரையுலகை வாழ வைக்கும், உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகம் முழுவதும் வாழும் நம் இரத்தங்களான இலங்கை தமிழர்களால் தான் சினிமா வாழ்கிறது. அந்தகைய இலங்கை தமிழரான ரஷீம், தமிழ் திரையுலகை வாழ வைக்க கூடிய முயற்சியான இந்த விட்ஃபா அமைப்பு மிகச்சிறந்த முயற்சியாக இருக்கிறது.
வெளியிடாமல் இருக்கும் திரைப்படங்கள் வெளியாவதோடு, பலரை தயாரிப்பாளராகவும், இயக்குநர்களாகவும் உருவாக்க உள்ள இந்த விட்ஃபா அமைப்பின் அனைத்து பணிகளும் வெற்றி பெற வேண்டும், ரஷீம் பல வெற்றி படங்களை இயக்கி வலம் பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “விட்ஃபா என்னும் போது என்க்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. திடீர் திடீரென்று புது புது சங்கங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. தொழிலாளர்கல் தான் சங்கம் தொடங்குவாங்க, இன்று முதலாளிகளே தொழிலாளர்கள் சங்கம் தொடங்குகிறார்கள். திரையுலகம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் படம் எடுப்பது சுலபம், ஆனால் அதை வெளியிடுவது என்பது மிக மிக கடினமாகி விட்டது. அப்படிப்பட்ட கடினமான வேலையை மிகவும் சுலபமாக செய்து கொடுக்க தான் இந்த விட்ஃபா அமைப்பு வந்திருக்கிறது. இந்த மாதிரி அமைப்பு, தற்போதைய தமிழ் சினிமாவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த தருணத்தில் விட்ஃபா அமைப்புக்கு ஒரு கோரிக்கிஅ வைக்கிறேன், வெளியிடாமல் இருக்கும் பல சிறிய படங்களில் மிக சிறப்பான பல படங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களை உங்கள் குழுவினர் பார்த்து அவற்றை வெளியிட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இது சினிமாவுக்கு நீங்கள் செய்யும் சேவையாக இருக்கும். இன்று சினிமா துறையில் சின்ன படம், பெரிய படம், என்று இல்லை. நல்ல படம் என்றால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற்றால் பெரிய படங்களாகி விடும். ஆக, நல்ல படம் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இன்று படங்கள் ஓட தொடங்கியிருக்கிறது, நல்ல படம் எடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். இந்த நேரத்தில் சினிமாக்காரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சினிமாவிடம் இருந்து பல லட்சக் கோடி வரி பெறும் அரசாங்கமும் இதற்கு பொறுப்பேற்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்று இந்த தருனத்தில் கேட்டுக் கொள்கிறேன். விட்ஃபா மிகப்பெரிய வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேசுகையில், “விட்ஃபா அமைப்பை பற்றி கேட்ட போது இது மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. ஒரு கதையை உயிராக நினைத்து சுமப்பவர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படிப்பட்ட கதைகளை தயாரித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்போது வருகின்ற படங்களில் வன்முறை அதிகம் இருக்கிறது. கமலே அப்படிப்பட்ட படங்களுக்கு சென்று விட்டார். அதற்கு காரணம் மக்கள் தான், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதை நோக்கியே படம் இயக்க தயாராகி விட்டோம். நம் வாழ்க்கையிலேயே நிறைய கதைகள் இருக்கிறது, அதை வைத்து படம் இயக்கினாலே வெற்றி பெற்று விடலாம்.
நான் இயக்கிய கரக்காட்டக்காரன் படத்தை பற்றி பாராட்டி பேசுகிறார்கள், தில்லானா மோகம்மாள் படத்தின் கரு தான் கரக்காட்டக்காரன், இதை நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும், இல்லை என்றால் தெரியாது. இசையும் அப்படித்தான் நீங்கள் கொண்டாடுகின்ற பல பாடல்களுக்கு வேறு ஒரு பாடல் உதாரணமாக இருக்கும். இதை காபி என்று சொல்லக்கூடாது, பாதிப்பு என்று சொல்ல வேண்டும். இங்கு யாரும் எதையும் தெரிந்துக் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு அமைகின்ற சூழலுக்கு ஏற்றபடி, நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.
விட்ஃபா அமைப்பின் செயல்கள் மிக சிறப்பானவையாக இருக்கிறது. நீங்கள் நல்ல கதையம் அம்சம் கொண்ட படங்களை தயாரித்தான், நாள் இளையராஜாவிடம் சொல்லி இலவசமாக இசை அமைக்க சொல்வேன், அதேபோல் நானும் இலவசமாக பாடல் எழுதி கொடுக்கிறேன், என்பதை இங்கே பதிவு செய்து கொண்டு, விட்ஃபா மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி” என்றார்.