”வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது..” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமானின் அறச்சீற்றம்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது, “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும் வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.
கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.
என் தம்பி இயக்குநர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்.. ஆனால் வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவ பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன முகத்தைப் பார்த்தேனோ, அதேபோன்ற ஒரு முகம்.. அதேபோன்ற ஒரு போராளியின் முகம்தான் மகேந்திரன்.. கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது.
இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும்.
இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்..” என்று கூறினார்.