சேப்பாக்கம் மைதானத்தில் மாஸ்டர் பாடலுக்கு நடனம் ஆடிய அஸ்வின் – தீயாக பரவும் வீடியோ
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் நடன அசைவை மைதானத்தில் செய்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களில் சூருண்டது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 429 ரன்கள் பின் தங்கியிருந்தது.

Photo by Pankaj Nangia/ Sportzpics for BCCI
இந்நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்கள்.
Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai! ??????? #INDvENG #Master pic.twitter.com/VEUQnEBoDL
— Srini Mama (@SriniMaama16) February 16, 2021
இந்த டெஸ்டில் அஸ்வின், ரோஹித் சர்மா இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்கள். கடினமான ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் எடுத்த அஸ்வின் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி சதமெடுத்தார். இதனால் ஆட்டநாயகன் விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் வெளிப்படுத்திய நடன அசைவை செய்திருப்பதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் அவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடினாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.