Site icon Chennai City News

சூரரைப்போற்று படத்தின் இந்தி ‘ரீமேக்’கை தயாரிக்கும் சூர்யா

SooraraiPottru In Hindi

சூரரைப்போற்று படத்தின் இந்தி ‘ரீமேக்’கை தயாரிக்கும் சூர்யா

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது ‘சூரரைப்போற்று’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும்.

இந்தி ரீமேக் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், “சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது.
உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களை தொடர்ந்து தந்துவரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது” என சூர்யா தெரிவித்தார்.

இந்த படத்தின் நிஜ, நாயகரான கேப்டன், ஜி.ஆர்.கோபிநாத் குறிப்பிடும்போது, “படத்தின் இயக்குநர் சுதா ‘என் கதையைச் சொல்ல வேண்டும்’ என்று என்னை அணுகியபோது நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணமும் என்னை ஒப்புக்கொள்ள வைத்தன..! சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தங்கள் கனவுகளைத் துரத்த குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. தற்போது இந்தி ரீமேக்கையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் “என்றார்.

அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, மக்களிடம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மீது எங்களுக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு.! பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்பதையே எங்கள் நிறுவன திரைப்படங்கள் எப்போதும் முயற்சித்து வருகின்றன. ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களுக்கும் கொண்டு செல்வதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.! குறிப்பாக, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் ஆகியோருடன் இணைவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது.! இதுபோன்ற உயர்த்தரமான படைப்புகளை தொடர்ந்து தந்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன். இயக்குநர் சுதாவை இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தக் கதையை உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு அவர் எப்போது தருவார் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Exit mobile version