குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் – நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப்

0
228

குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் – நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப்

சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் படங்கள் திரையிட தொடங்கிய பின்பு அந்தப்படத்தின் முதலீட்டில் எந்த சம்பந்தமும் இல்லாத டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்த தொடங்கின.

படத்தின் மூலப்பிரதி தயாரிப்பாளர்களிடம் இருந்தாலும் அதனை தனது டிஜிட்டல் சேமிப்பகத்தில் வைத்திருக்கும் கியூப், சோனி, டிஸ்ஆர் போன்ற நிறுவனங்கள் மூலமே திரையரங்குகளில் படத்தை திரையிட முடியும். இதனால் கியூப் நிறுவனத்திடம் முதலாளியின் உத்தரவுக்கு காத்திருக்கும் வேலையாள் நிலைமைக்கு பட முதலாளிகள், படத்தின் நெகட்டிவ் உரிமை வைத்திருப்பவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அப்படியொரு நிலைமை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தின் திரையரங்க உரிமை வைத்திருக்கும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கியூப் டிஜிட்டல் நிறுவனத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குரூப் நிறுவனம் மேற்கொண்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாமி வரம் கொடுத்தாலும் பூஜாரி வரம் கொடுக்க விட மாட்டாரு என்பது கிராமங்களில் தினந்தோறும் பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. அது போன்றதொரு நிலைமை நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை மறுவெளியீடு செய்யும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல் மூலம் திரைப்படங்களை திரையிடும் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ள கியூப் நிறுவனத்தால் குணா படத்தை பிரமிட் குரூப் திட்டமிட்ட அடிப்படையில் சூன் 21 ஆம் தேதி வெளியிட முடியவில்லை என்கின்றனர் தமிழ்சினிமா வட்டாரத்தில்.

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி , கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர்.

வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது.

33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களும் குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு சாட்சியாக உள்ளது மஞ்சு மெல் பாய்ஸ் படத்தின் வெற்றி.

மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் இந்த வருடம் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமம் வரை உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே என கூறப்பட்டது.

இதனால் குணா திரைப்படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குணா படத்தின் நெகட்டிவ் உரிமை பிரமிட் குரூப் நிறுவனத்திடம் குறிப்பாக திரையரங்குகளில் வெளியிடும் உரிமை இருந்ததால் சூன் 21 அன்று மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வடிவத்தில் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவித்தனர். அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் முடிவடைந்த சூழலில் டிஜிட்டல் மூலம் படங்களை திரையிடும் கியூப் நிறுவனம் படத்தை ஒளிபரப்ப மறுத்ததால் சூன் 21 அன்று படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

நெகட்டிவ் உரிமை ஆவணத்தின் அடிப்படையில்பிரமிட் நிறுவனத்திற்கு பிரசாத் பிலிம் லேபரட்டரி வழங்கியிருக்கும் ஆவணத்தில் திரையரங்குகளில் குணாபடத்தை வெளியிடும் உரிமை உள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் கியூப் நிறுவனம் ‘தியேட்ரிக்கல்’ என குறிப்பிடவில்லை என்று கூறி வருகிறது. அதே நேரம் வெளிநாடுகளில் குணா படத்தை திரையிடும் உரிமையை தங்கள் நிறுவனத்திற்கு வழங்குமாறு பிரமிட் குரூப்பிடம் கேட்டதாகவும் அதற்கு எந்த தடையும் இல்லை என்று குணா படத்தை தியேட்டரில் ஒளிபரப்புவதுதில் முரண்பட்ட நிலையை கியூப் நிறுவனம் கடைப்பிடிக்கிறது என கூறப்படுகிறது.

படத்தை தமிழகத்தில் ஒளிபரப்புவதற்கு மறுப்பதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக வழங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குணா படத்தை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியிடுவது கியூப் நிறுவனத்தால் தடைபட்டு, தாமதமாகி வருகிறது என்று பிரமிட் குரூப் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வழக்கம்போல விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது குணா படத்தின் திரையரங்க உரிமை தன்னிடம் உள்ளது என கியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பிய கன்சிராம் என்பவர் அதற்கான ஆவணத்தை வழங்கவில்லை. தங்களது சங்க உறுப்பினர் என்பதற்காக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு குணா படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் உரிமையை உறுதிப்படுத்தவும், ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் சம்பந்தமில் லால் காரணங்களை கூறி குணா படத்தின் மறு வெளியீட்டை தடுத்து வரும் கியூப் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குருப் தொடங்கியுள்ளது.