கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் மறைவை முன்னிட்டு நினைவு அஞ்சலி கூட்டம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் கே. ராஜன், பி. அந்தோணி தாஸ், எஸ். நந்தகோபால், யு. தருண்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் & சங்க உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர்.
கேயார் KR, “நமக்கு பலரிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், சேகர் ஒருவரின் நினைவஞ்சலிக்கு இத்தனை பேர் ஒன்று சேர்ந்திருப்பதே அவர் எந்தளவுக்கு நல்லவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் சம்பாதித்து வைத்த சொத்தே இத்தனை நல்ல உள்ளங்கள்தான். அதுதான் அவரது சாதனை. சினிமா தவிர வேறு எதையும் பேச மாட்டார். அவரது கஷ்டங்களை பெரிதாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார். எல்லோரிடமும் நட்பு பாராட்டுவார். சிரித்த முகத்துடனேயே இருப்பார். இதெல்லாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார்.
இயக்குநர் வி. சேகர், “யாரிடமும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்த நபர் கலைப்புலி சேகரன். இவரும் கலைப்புலி தாணு அவர்களும் நல்ல நண்பர்கள். சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள் உடலை கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றி, தோல்விகள் எல்லாருக்கும் சகஜம்தான். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றார்.
கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது, ”என் உடன் பிறவா சகோதரர் கலைப்புலி ஜி. சேகரன். 1973 காலக்கட்டத்தில் இருந்தே கலைப்புலி சேகரன் எனக்கு பழக்கம். அவருடன் பல நல்ல நினைவுகள் சம்பவங்கள் இருக்கிறது. பல நேரங்களில் என் அலுவலகத்தில் மதிய உணவு சேர்ந்து சாப்பிடுவோம். அவரது கதைகளை கேட்டு மெய்சிலிர்த்து இருக்கிறோம். கலைப்புலி சேகரன் கதை சொன்னால் யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்குத் திறமையானவர். ரஜினி, கமல், பிரபுதேவா, கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு கதை சொல்லி இருக்கிறார். அவர் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்து நேரில் சென்று பார்த்தேன். சில கோரிக்கைகள் வைத்தார். அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது” என்றார்.
ஜெய்குமார் மெட்ரோ, “கலைப்புலி ஜி. சேகரன் எங்கள் அனைவருக்கும் நல்ல நண்பர். தீர்க்கமான கொள்கை உடையவர். எப்போதும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு அவர் நல்ல உதாரணம். தனது கருத்தை ஊர்ஜிதமாக தைரியமாக முன்னெடுத்து வைக்கக் கூடியவர். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தகர்கள் அசோசியேஷன் தலைவர் கே. ராஜன், “கலைப்புலி சேகரன் எங்களை விட்டு பிரிந்ததை இன்னும் ஏற்க முடியவில்லை. சினிமாவைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிப்பார். எல்லோருடனும் நட்பு பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் எப்போதும் எங்களை விட்டு நீங்காது” என்றார்.
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தகர்கள் அசோசியேஷன் செக்ரட்ரி. தயாரிப்பாளர் நந்தகோபால், “எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார் கலைப்புலி சேகரன். எங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பர். கடந்த விநியோகஸ்தர்கள் அசோசியேஷன் தேர்தலில் செக்ரட்ரி பதவிக்கு என்னை போட்டியிட வைத்ததே அவர்தான். அவர் பிரிவு எதிர்பாராதது. நிச்சயம் அவரது ஆசி எங்களை வழிநடத்தும்” என்றார்.