Chennai City News

ஐந்து ஆண்டுகள் ஆய்வு – டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஐந்து ஆண்டுகள் ஆய்வு – டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

தனியிசைக் கலைஞராக ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர், இசையமைப்பாளர், ராப் பாடகர்,  நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு தமிழ் சினிமாவில் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார்.

இவர் ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை-2’, ‘கதகளி’, ‘கத்தி சண்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோமாளி’, ‘ஆக்ஷன்’ உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே, ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு, தனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாக கொண்டோருக்கு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்ததை அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் (24-08-2023) நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார். இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது:

“இசையில் தொழில்முனைவு பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் இன்று, பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தை பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளை செய்து கொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது. ”

“அடுத்ததாக பி.டி. சார் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று நினைக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version