இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவது முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
சென்னை, இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். நடைபெற உள்ள உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) குறித்து தென்னிந்திய திரைப்பட தொழில் சங்கத்துடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கியது பற்றி கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் டாக்டர் எல். முருகன் கூறியிருப்பதாவது:
“உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025 #WAVES2025 குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழில் சங்கத்துடன் புதுதில்லியில் இருந்து ஒரு ஆக்கபூர்வமான காணொலிக் காட்சி கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கினேன். இது, திரைப்படங்களை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையை வலுப்படுத்துவதற்கும் ஏதுவான முயற்சிகளை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு; இணைச் செயலாளர் திரு செந்தில் ராஜன், திரைப்படங்கள் பிரிவின் இணைச் செயலாளர் டாக்டர் அஜய் நாகபூஷண் எம்.என் மற்றும் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவது அவசியம்.”