அஜித் படத்தில் தனது பாடல்கள்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்!
சென்னை, அஜித்குமார் நடித்த படத்தில் தனது பாடல்கள் இடம்பெற்றதையடுத்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இளையராஜா பாடல்கள் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்தது. திரிஷா, அர்ஜூன் தாஸ், சிம்ரன், பிரசன்னா, சுனில், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர்.
படத்தின் வசூல் ரூ.200 கோடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் ‘நாட்டுப்புற பாட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபா தாரேன்’ என்ற பாடலும், ‘விக் ரம்’ படத்தில் ‘என் ஜோடி மஞ் சக்குருவி’ பாடலும், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற ‘இளமை இதோ இதோ…’ உள்ளிட்ட ரெட்ரோ பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இளைய ராஜா இசையமைத்த பாடல்கள் ஆகும்.
இந்தநிலையில் தனது அனுமதியில்லாமல் இந்த 3 பாடல்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி படத்தயாரிப்பாளருக்கு இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில், தனது அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்கவேண்டும். 7 நாட்களில் எழுத்துப் பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.