ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் – ‘இது முதலமைச்சரின் பெருந்தன்மையை காட்டுகிறது’ – செல்வப்பெருந்தகை!

0
82

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் – ‘இது முதலமைச்சரின் பெருந்தன்மையை காட்டுகிறது’ – செல்வப்பெருந்தகை!

ஜெயலலிதாவின் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்கு வைக்கும் மசோதாவிற்காக சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்றது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை காட்டுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நிறுத்தி வைத்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு தொடுத்த வழக்கின் விளைவாக, 10 தமிழக பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாகையில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரை, தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்று மாற்ற வகை செய்யும் மசோதாவும் ஒன்று.

2020இல் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவையும் தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சட்டப் போராட்டத்தினால் இதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் தனது தனி அதிகாரத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு– 142 (Article)-ன்படி செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புகள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆளுநரின் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திமுகவை வாழ்நாள் முழுதும் தீவிரமாக எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்கு வைக்கும் மசோதாவிற்காக சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்றது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை மற்றும் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.