ராபர் சினிமா விமர்சனம் : ராபர் – பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு குற்றத் திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
345

ராபர் சினிமா விமர்சனம் : ராபர் – பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு குற்றத் திரில்லர் | ரேட்டிங்: 3/5

இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ராபர். இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.​

நடிகர்கள் : சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்றாயன், டேனி போப், பாண்டியன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்,இசை : ஜோகன் சிவனேஷ், படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த், கலை : விஜய் சரவணன்,நடனம் : ஹரி கிருஷ்ணன்,பாடல்கள் : அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி,இயக்கம் :  எஸ். எம். பாண்டி,வெளியீடு:  சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, மக்கள் தொடர்பு : ஹரிபாபு

வாழ்க்கை நடத்த சென்னைக்குச் சென்ற சத்யா (சத்யா) என்ற இளைஞன் போட்டி நிறைந்த ஆடம்பர மற்றும் உல்லாச வாழ்க்கை நடத்த பணத்திற்காக கொள்ளை மற்றும் குற்றங்களின் உலகில் இறங்குகிறார். சத்யாவின் கதையை ஒரு கைதி தான் அறையில் இருக்கும் மற்றவர்களிடம் விவரிக்கிறார்.
கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் நாயகன் சத்யாவுக்கு, கால் சென்டரில் வேலை கிடைக்கிறது ஊரில் இருக்கும் அம்மாவுக்கு (அம்மா தீபா சங்கர்) சம்பளத்தில் ஒரு பகுதியை அனுப்பிவிட்டு வாழ்க்கையை ஓட்டுகிறார். ஆனால் தான் வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் ஜாலியாக ஊர் சுற்றியும், டேட்டிங் செல்வதையும் பார்த்து சத்யாவுக்கும் அந்த நாகரிக மோகத்தை அனுபவிக்க ஆசை ஏற்படுகிறது. ஆனால் வாங்கும் சம்பளத்தை வைத்து அவற்றை அடைய முடியவில்லை. இதனால் ஒரு பக்கம் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வரும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறார். தான் எண்ணிய அனைத்தையும் அனுபவிக்க தொடங்குகிறான். மேலும் இந்த பண போதை அவனை கொலை செய்யும் அளவுக்கு எப்படி இரக்கமற்ற கொடூரமானவனாக மாற்றுகிறது என்றும், கொள்ளையர்களிடையே நகை பரிமாற்றத் தொடர்புகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களையும், கொலைகளைச் செய்யும் போது எந்த வருத்தமும் இல்லாத ஒரு கொள்ளையனாக மாறியவனை இந்தப் ராபர் பின் தொடரும் போது இளம் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தின் போது அந்த பெண் இறந்து விடுகிறார். இந்த இளம் பெண் விபத்தில் இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இது கொலை தான் என்பதை ஒரு போலீஸ்காரர் (பாண்டியன்) மூலம் அந்த பெண்ணின் அப்பா (ஜெயப் பிரகாஷ்) தெரிந்து கொள்கிறார். அந்த போலீஸ்காரர் உதவியுடன் அவர் தன் மகளை கொன்றவனை கடத்துகிறார். அதன் பின் என் நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

சத்யா தனது கதாபாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை தனக்கான உடல்மொழி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

அம்மாவாக நடிக்கும் தீபா சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தனது மகன் மீது அளவற்ற பாசம் கொண்ட ஒரு தாய், தனது மகன் ஒரு கொடூரமானவன் என்பதை அறியும் உச்சகட்டக் காட்சியில் அவர் எடுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் முடிவில் உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மகளை இழந்து தவித்து, மகளின் சாவுக்கு காரணமானவனை பழிவாங்க துடிக்கும் தந்தையாக ஜெயபிரகாஷ் யதார்த்தமான நடிப்பு தந்து திரைக்கதைக்கு ஆழத்தை சேர்த்துள்ளார்.

நல்ல காவலராக பாண்டியன் படம் முழுக்க வந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், டேனியல் ஆனி போப், சென்ட்ராயன் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார் சென்னை நகரத்தையும், சங்கிலி பறிப்பு காட்சிகளையும் கோமிரா கோணங்களில் அற்புதமாகப் படம் பிடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜோஹன் சிவனேஷின் இசையும், எடிட்டர் ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும், சங்கிலி பறிப்பு திருடனின் வாழ்க்கைக் கதையை சொல்லும் திரைக்கதையை, விறுவிறுப்பாக முன்னோக்கி நகர்த்த உதவுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் பல ஆண்டுகளாக, தனியாக நடந்து செல்லும்போது அல்லது பைக்கில் செல்லும் போது பெண்களின் சங்கிலிகள் மற்றும் செல்போன்கள் பறிக்கப்படுகின்றன. இரக்கமற்ற சங்கிலி பறிப்பாளர்களால் தாக்கப்படும் பெண்கள் மனச்சோர்வடைகிறார்கள். அதே நேரத்தில், இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் எஸ்.எம். பாண்டி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் திரைக்கதையை வித்தியாசமான முறையில், எதிர்பாராத உச்சக்கட்டத்துடன் இயக்கியுள்ளார்.

மொத்தத்தில், இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பாக பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள ராபர் – பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு குற்றத் திரில்லர்.